ஈரோடுசித்தோடு லாரியில் கைவரிசை 630 கிலோ மசாலா பொருட்களை திருடிய 4 பேர் கைதுலாரிகளை குறிவைத்து திருட்டு
ஈரோடு, ஜன. 16 -
ஈரோடு பெரியசேமூர் ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (61). லாரி ஆபீஸ் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் இருந்து லாரியில் பல்வேறு வெளி மாநிலங்களுக்கு மசாலா பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதன்படி சம்பவத்தன்று பழனிச்சாமி நிறுவன லாரி ஒன்று மசாலா பொருட்களை ஏற்றிக்கொண்டு கிளம்பி சென்றது. சித்தோடு பகுதியில் உள்ள சேலம்- கோவை பைபாசில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சாப்பிட சென்றார். சாப்பிட்டுவிட்டு டிரைவர் திரும்பி வந்த போது லாரியின் பின்புற தார்ப்பாய் கிழிக்கப்பட்டு அதில் இருந்த 630 கிலோ மசாலா பாக்கெட் திருட்டு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும். இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சித்தோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் மதுரை நாகமலை பகுதியைச் சேர்ந்த பிரசாத் (37), உசிலம்பட்டி பகுதி சேர்ந்த பாரதி (31), மதுரை திருமங்கலம் பகுதி ரூபன் (24), மதுரை, நாகமலை பகுதி சேர்ந்த முத்துக்குமார்(49) ஆகியோரை பிடித்து விசாரித்த போது லாரியில் மாசலா பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இந்த கும்பல் நெடுஞ்சாலைகளில் மெதுவாக செல்லும் லாரிகளை குறிவைத்து பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் பிரசாந்த் மீது 18 வழக்குகள், பாரதி மீது மூன்று வழக்குகள் உள்ளன. பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.