Type Here to Get Search Results !

ஈரோடு சென்னிமலையில் நான்கு பேரை கொன்ற வழக்கில் விவசாயிக்கு 35 ஆண்டுகள் ஜெயில்; வாலிபருக்கு ஆயுள் தண்டனை- ஈரோடு மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

சென்னிமலையில்4 பேரை கொன்ற வழக்கில் விவசாயிக்கு 35 ஆண்டுகள் ஜெயில்; வாலிபருக்கு ஆயுள் தண்டனை- ஈரோடு மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
சென்னிமலையில் கொரோனா முகாம் என்று கூறி விஷ மாத்திரை கொடுத்து 4 பேரை கொன்ற வழக்கில் விவசாயிக்கு 35 ஆண்டுகள் ஜெயில்; வாலிபருக்கு ஆயுள் தண்டனை- ஈரோடு மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

சென்னிமலையில் கொரோனா முகாம் என்று கூறி விஷமாத்திரை கொடுத்து 4 பேரை கொன்ற வழக்கில் விவசாயிக்கு 35 ஆண்டுகள் ஜெயில் மற்றும் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. நண்பர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கே.ஜி.வலசு சேனாங்காடு பெருமாள் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (வயது 75). இவரது மனைவி மல்லிகா (58). இவர்களுக்கு தீபா (30) என்ற மகள் இருந்தார். கருப்பண்ண கவுண்டரின் நண்பர் கல்யாணசுந்தரம் (43). இவர் அந்தியூர் மூங்கில்பாளையம் கீழ்வாணி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஆவார். தொடக்கத்தில் பால்வியாபாரம் செய்து வந்த இவர், குத்தகைக்கு தோட்டம் எடுத்து விவசாயம் செய்யும் முடிவுக்கு வந்தார். அப்போது கருப்பண்ணகவுண்டரிடம் பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் நண்பர்கள் ஆனார்கள். இதனால் கல்யாணசுந்தரம் அடிக்கடி கருப்பண்ணகவுண்டர் வீட்டுக்கு வந்து சென்றார்.
ரூ.14 லட்சம் கடன் கல்யாணசுந்தரம் விவசாய பணிகளுக்காக அவ்வப்போது கருப்பண்ணகவுண்டரிடம் கடனாக பணம் பெற்று வந்தார். அந்த தொகை ரூ.14 லட்சமாக உயர்ந்தது. இந்த பணத்தை அவர் திரும்ப கேட்டபோது 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 22-6-2021 அன்று கருப்பணகவுண்டர் அவருக்கு தெரிந்த நபர்கள் முன்னிலையில் கல்யாணசுந்தரத்துடன் பேச்சுவார்த்தை (பஞ்சாயத்து) நடத்தினார். அப்போது பணத்தை 25-6-2021-க்குள் திரும்ப தரவில்லை என்றால் கல்யாணசுந்தரத்தையும், அவரது குடும்பத்தினரையும் அவமானப்படுத்தி விடுவதாக கருப்பண்ணகவுண்டர் கூறினார். கொலை திட்டம் இது கல்யாணசுந்தரத்துக்கு வஞ்சகத்தன்மையை ஏற்படுத்தியது. கருப்பண்ணகவுண்டரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தோட்டத்தில் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரையை அவருக்கு கொடுக்க முடிவு செய்தார். மாத்திரையின் வாசத்தை வைத்து அவர் கண்டுபிடித்து விடாமல் இருக்க மாத்திரையை காபிதூளில் போட்டு வைத்தார்
மாத்திரையை எப்படி கொடுத்து கொலை செய்வது என்று அவர் திட்டமிட்டுக்கொண்டு இருந்தபோது, ஆங்காங்கே கொரோனா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இதை சாதகமாக பயன்படுத்திய கல்யாணசுந்தரம் வஞ்சகமாக திட்டம் தீட்டினார். வாலிபருடன்... அவருக்கு தெரிந்த, சென்னிமலை எம்.பி.என்.காலனி சரவணம்பட்டியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் போத்தீஸ்குமார் என்கிற சபரி (21) என்பவரை சந்தித்தார். அவரிடம் கொரோனா நோய் பரிசோதனைக்காக அரசு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. அந்த வேலையை வாங்கித்தருகிறேன். அதற்கு பதிலாக விஷ மாத்திரையை கருப்பண்ண கவுண்டரை சாப்பிட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசு வேலை ஆசையில், தெரிந்தே விஷ மாத்திரைகளை கொடுக்க வாலிபர் போத்தீஸ்குமார் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து 26-6-2021 அன்று கல்யாணசுந்தரம் அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் போத்தீஸ்குமாருடன் பெருமாள் மலையில் உள்ள கருப்பண்ணகவுண்டரின் வீட்டுக்கு சென்றார். அப்போது ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷ மாத்திரையையும் போத்தீஸ்குமார் வைத்திருந்த பையில் வைத்துக்கொண்டார்.
வீட்டின் முன்பு சென்றதும் போத்தீஸ்குமாரை வெளியே நிற்க வைத்துவிட்டு, கல்யாணசுந்தரம் உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து போத்தீஸ்குமார் வீட்டுக்கு வெளியே நின்று அழைத்தார். கொரோனா மாத்திரை இதற்கிடையே கருப்பண்ணகவுண்டரின் மகள் தீபாவுக்கு 2-வது குழந்தை பிறந்ததால் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். போத்தீஸ்குமார் அழைத்ததும் தீபா வெளியேவந்து என்ன என்று கேட்டார். அதற்கு அவர், கொரோனா பரிசோதனைக்காக வந்திருக்கிறேன். வீட்டில் இருக்கும் அனைவரையும் வெளியே அழைத்து வாருங்கள் என்று கூறினார். தீபாவும் அதை நம்பி, தந்தை, தாய் ஆகியோரை வெளியே அழைத்தார். அவர்களுடன் திட்டமிட்டபடி கல்யாணசுந்தரமும் வந்து, விசாரிப்பதுபோல் நடித்தார். பின்னர் போத்தீஸ்குமார் மறைத்து வைத்திருந்த விஷ மாத்திரையை எடுத்து, முகாம் மூலம் கொரோனாவுக்காக இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. இதை அனைவரும் சாப்பிடுங்கள் என்று கூறி கட்டாயப்படுத்தினார். கல்யாணசுந்தரம், சற்று முன்பு அம்மாபாளையத்தில் நடந்த முகாமில் மாத்திரை சாப்பிட்டு விட்டேன். சுடுநீரில் மாத்திரையை சாப்பிடுங்கள் என்று கூறினார். அதை நம்பிய தீபா, கருப்பண்ணகவுண்டர், மல்லிகா ஆகிய 3 பேரும் மாத்திரையை சாப்பிட்டனர். அப்போது அவர்களின் தோட்டத்தில் வேலை செய்யும் குப்பம்மாள் என்ற பெண் வந்தார். அவர் தங்களுக்கு எதிரான சாட்சியாக மாறிவிடக்கூடும் என்று எண்ணிய 2 பேரும் குப்பம்மாளுக்கும் ஒரு விஷ மாத்திரையை கொடுத்து சாப்பிட வைத்தனர். 4 பேரும் மாத்திரை சாப்பிட்டதை உறுதி செய்த கல்யாணசுந்தரம் அங்கிருந்து புறப்படுவதாக கூறி வெளியேறினார். போத்தீஸ்குமாரும், தனக்கு கால் வலிப்பதாகவும், தன்னை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்செல்லும்படியும் கேட்டு அவருடன் சென்று தப்பினார்.

கொலை வழக்கு மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தீபாவுக்கு உடலில் ஏதோ மாற்றம் தெரிய அவரது கணவர் பிரபு-வுக்கு தகவல் தெரிவித்தார். அவரும், அக்கம்பக்கத்தினரும் விரைந்து வரும் முன்பு 4 பேரும் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 பெண்கள் உள்பட 4 பேரும் உயிரிழந்தனர். தீபா உயிரிழக்கும் முன்பு சிகிச்சையில் இருந்தபோதுபெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னிமலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, கல்யாணசுந்தரம், போத்தீஸ்குமார் என்கிற சபரி ஆகியோரை கைது செய்தனர். கோர்ட்டு தீர்ப்பு இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் முதல் குற்றவாளியான கல்யாணசுந்தரத்துக்கு 35½ ஆண்டுகள் ஜெயில் மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். 2-வது குற்றவாளியான போத்தீஸ்குமார் என்கிற சபரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். கொரோனா காலககட்டத்தில் மக்களின் அச்சத்தை பயன்படுத்தி முகாம் என்று கூறி திட்டமிட்டு விஷமாத்திரை கொடுத்து 3 பெண்கள் உள்பட 4 பேரை விவசாயி கொலை செய்த சம்பவம் சென்னிமலை சுற்ற ுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேருக்கும் உச்சபட்ச தண்டனையை வழங்கி ஈரோடு மகளிர் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.