த. ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.
கல்வி நிறுவன நூலகங்களை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
த. ஸ்டாலின் குணசேகரன் பேசினார்
பள்ளி கல்லூரிகளில் உள்ள நூலகங்களை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ’ என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.
ஈரோடு – வேப்பம்பாளையத்திலுள்ள தி ஈரோடு காலேஜ் ஆஃப் ஃபார்மஸியின் 30 ஆம் ஆண்டுவிழா கடந்த புதன்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற த. ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது :
கல்வி நிறுவனங்களிலுள்ள நூலகங்கள் உயிரோட்டமாக இயங்க வேண்டும். அரிதினும் அரிதான நூல்கள் இடம் பெறுவதோடு மாணவர்கள் அமர்ந்து ஈடுபாட்டுடன் நூல்களை வாசிக்கத்தக்க சூழல் நிலவ வேண்டும். உலக அளவிலான ஏராளமான இணைய ஆய்விதழ்களுக்கு இக்கல்லூரி நூலகம் சந்தா கட்டி அவற்றை வரவழைத்துள்ளது பாராட்டத்தக்கதாகும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் இதயம் போன்றவை அங்குள்ள நூலகங்கள்.ஆசிரியர்கள் தங்களை மேலும் மேலும் தகுதிப்படுத்திக் கொள்வதும் , எல்லா வழிகளிலும் மேம்படுத்திக் கொள்வதும் இன்றைய காலத்தின் தேவையாகும்.
தாங்கள் எடுக்கிற பாடத்தில் ஆழமும் பாடம் எடுப்பதில் தனித் திறமையும் , பன்முக ஆளுமையும், சமூக உணர்வும் மிக்க ஆசிரியர்களே தலைசிறந்த ஆசிரியர்களாகப் போற்றப்படுகின்றனர்.
வெறும் பட்டதாரிகளை உருவாக்குவது மட்டுமல்ல சமூகப் பொறுப்பு மிக்க நல்ல குடிமக்களை உருவாக்குவது கல்வி நிறுவனங்களின் கடமையாகும்.
மருந்தியல் இன்று உலக அளவில் முன்னெப்போவதைக் காட்டிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலை நாடுகளில் மருத்துவர்களைப் போலவே மருந்தியலாளர்கள் மருந்துகளை எழுதிக் கொடுக்கும் மாண்பைப் பெற்றுள்ளனர்.
மருத்துவர்கள் , மருந்தியலாளர்கள் , செவிலியர்கள் போன்ற மருத்துவம் தொடர்புள்ள அனைத்துப் பிரிவினரும் மிகுந்த போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள் என்றார்.
கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஏ. நடராஜன் , தலைவர் பேராசிரியர் பி. ஜெகநாதன் , துணைத் தலைவர் எம். தங்கமுத்து , கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சம்பத்குமார் , துணை முதல்வர் முனைவர் வி.எஸ். சரவணன் கல்லூரி நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றனர்.