Type Here to Get Search Results !

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.50 கோடி மோசடி

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.50 கோடி மோசடி
கைதான ராதாகிருஷ்ணன் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க முடிவு
ஈரோடு, ஜன.6 -
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பச்சமலை அடிவாரத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரிதேவி. ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். நண்பர் ஒருவர் மூலம் திருப்பூர் ராயபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (45) என்பவர் இவரிடம் அறிமுகம் ஆனார். தனக்கு தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து வரும் முக்கிய பொறுப்பில் உள்ள உயரதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் உதவியுடன் ரெயில்வேயில் பணி வாங்கித் தர முடியும் எனக் கூறி கஸ்தூரிதேவியை நம்ப வைத்துள்ளார். குறிப்பாக, ரெயில்வேயில் பொறியாளர் பணியிடங்களான ஏ.இ., ஜே.இ., பணியிடங்களிலும், அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை தன்னால் வாங்கித் தர முடியும் என்று கூறியுள்ளார். உங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களிடம் கூறினால் அவர்களுக்கு பணி வாங்கித் தருவதாகவும், ஒவ்வொரு பணியிடத்துக்கும் குறிப்பிட்ட தொகை செலவாகும் என்றும் கூறியுள்ளார். அதன்படி ஒவ்வொரு வேலைக்கும் ரூ. 10 முதல் ரூ.25 லட்சம் வரையிலும் செலவாகும் என்று கூறியுள்ளார்.
இந்தத் தொகையை கொடுத்தால் உடனடியாக பணிநியமன ஆணையை பெற்றுத் தருவதாகவும் நவநீதகிருஷ்ணன் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். இதை நம்பி கஸ்தூரிதேவி, அவரின் நண்பர்கள், உறவினர்கள் என 14 பேரிடம் இருந்து பல தவணைகளாக பணத்தை பெற்றுத் தந்துள்ளார். வேலை கேட்டு வந்தவர்களிடம் இருந்து நவநீதகிருஷ்ணன் இந்தத் தொகையை நேரடியாக வாங்காமல், கஸ்தூரிதேவியின் வங்கிக் கணக்கில் செலுத்தச் வைத்து அவரிடம் இருந்து ரூ. 10 லட்சம், 20 லட்சம் என மொத்தம் ரூ. 2 கோடியே 55 லட்சத்தை வாங்கியுள்ளார். பணம் வாங்கியவர்களிடம் குறிப்பிட்ட நாளில் வரச்சொல்லி, அவர்களுக்கு இந்திய ரெயில்வேயில் பணி சேருவதற்கான போலியாக தயாரிக்கப்பட்ட பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.
இந்த போலி பணி ஆணையை நவநீதகிருஷ்ணன் கொடுக்கும்போது அவர்களிடம், ரெயில்வே பணிக்கான பயிற்சி திருச்சி ரெயில்வே அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கான அழைப்பு உங்களைத் தேடி வரும் என்றும், அதுவரை பணி நியமன ஆணையுடன் காத்திருக்குமாறு கூறி விட்டு பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். அதன் பின் அவரை பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் நவநீதகிருஷ்ணன் தொலைபேசியை எடுக்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் சுவிட்ச்- ஆப் ஆகியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், நவநீதகிருஷ்ணன் வழங்கிய ரெயில்வே பணி நியமன ஆணை உண்மையானது தானா என்று பரிசோதித்து பார்த்துள்ளார். அப்போதுதான் அவர் கொடுத்தது போலியான பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது.
பணத்தை வாங்கிக் கொண்டு தாங்கள் ஏமாற்றி விட்டதை உணர்ந்தவர்கள் கஸ்தூரிதேவியிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டனர். தான் வாங்கி பணத்தை நவநீதகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டதாகவும் கஸ்தூரிதேவி கூறியுள்ளார். 
இதையடுத்து கஸ்தூரிதேவி உள்ளிட்ட 14 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம், மோசடி நபரான நவநீதகிருஷ்ணனிடம் இருந்து பணத்தை பெற்றுத் தரக்கோரி மனு அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி.சசிமோகன்உத்தரவிட்டதையடுத்து, இன்ஸ்பெக்டர் கோமதி, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், பணம் கொடுத்து ஏமாந்தது தெரிய வந்ததையடுத்து திருப்பூரில் பதுங்கி இருந்த நவநீதகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது நவநீதகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நவநீதகிருஷ்ணன் மெடிக்கல் ஏஜெண்டாக செயல்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி கூறும்போது, 
மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நவநீதகிருஷ்ணன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. நவநீதகிருஷ்ணன் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி பணம் பெற்றார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இருந்தால் அவர்களும் புகார் அளிக்கலாம்.
தற்போது சிறையில் உள்ள நவநீதிகிருஷ்ணணை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பணத்தை அவர் எங்கு வைத்துள்ளார் என்ற தகவலும் வெளிவரும் என்றார் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.