Type Here to Get Search Results !

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து 20.01.2023 ஆளுநர் மாளிகை முற்றுகை யிடும் போராட்டம் CPIMமாநிலசெயலாளர்கே.பாலகிருஷ்ணன்அறிக்கை

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து 20.01.2023 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் CPIMமாநிலசெயலாளர்
கே.பாலகிருஷ்ணன் அறிக்கை
CPIMமாநிலசெயலாளர்
கே.பாலகிருஷ்ணன் இன்று பத்திரிகையாளரைச் சந்தித்தார்.* *அச்சந்திப்பின்போது வெளியிடப்பட்ட அறிக்கை:*

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (11.01.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர்கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் 1 :

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து 20.01.2023 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம்

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்களின் பதவியை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மிரட்டியும், உருட்டியும் அரசியல் குழப்பத்தை நடத்தி வருகின்றனர் பாரதிய ஜனதா கட்சியினர். குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் ஆளுநர்கள் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் ஆளுநர் ஆர்.என். ரவி ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி இத்தகைய அரசியலமைப்பு விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.சின் சனாதன கருத்துக்களை பரப்புவது, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை ஆதரிப்பது, தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் இவற்றிற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒன்றிய அரசிற்கு மட்டுமே கட்டுப்பட வேண்டுமென்பது, ‘ தமிழ்நாடு ’ என்ற பெயரை ஏற்க மறுப்பது, நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி தடை ஆகிய மசோதாக்கள் உள்ளிட்டு 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது ஆகியவற்றை செய்து வருகிறார். மேலும், ஒரு முழுநேர அரசியல்வாதியாக அரசியலைப்புச் சட்டத்தை மீறி தலையீடுகள் செய்து வருகிறார்.

சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அச்சிட்டு கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் சில பகுதிகளை நீக்கியும், தனது சொந்த கருத்துக்களை திணித்தும், மதிப்புமிக்க தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமலும், தமிழ்நாடு அரசின் கொள்கைகள் குறித்த வாசகங்களையும் வாசிக்காமலும், அவை மரபினை கடைபிடிக்காமலும், சட்டசபையின் மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்பட்டு தேசிய கீதம் இசைக்கும்முன் வெளியேறியது என்பது 8 கோடி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்துள்ள மாபெரும் துரோகமாகும். ஒன்றிய பாஜக அரசின் நிர்ப்பந்தங்களின்படி தமிழ்நாட்டில் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்துகிற வகையில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார் ஆளுநர்.

அவரின் இத்தகைய செயல்களை கண்டித்தும், தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கோரியும், ஒன்றிய பாஜக அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 20.1.2023 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு அறைகூவல் விடுகிறது.

தீர்மானம் 2 :

சேகுவேரா புதல்வி அலெய்டா குவேரா சென்னை வருகை மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி

கியூபப் புரட்சியாளரும், உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகராக திகழும் தோழர் சேகுவேரா அவர்களின் புதல்வி அலெய்டா குவேராவும், பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேராவும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 2023 ஜனவரி 17 அன்று சென்னை வரும் அவர்களுக்கு விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் அளிக்கப்படுகிறது.

அதோடு, கியூப சோசலிசத்தின் மாண்புகளை பறைசாற்றவும், கியூப மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் 18.01.2023 அன்று சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் கேரள அமைச்சருமான தோழர் எம்.ஏ.பேபி, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி எம்.பி., சிபிஐ மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோபண்ணா, விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மற்றும் இடதுசாரி இயக்க தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 3:

குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தவர்களை கண்டறிந்து
உடனடியாக கைது செய்திடுக!
சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம்!!

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்டது இறையூர் வேங்கைவயல் கிராமம். இது கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது. வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மனித மலத்தை கலந்துள்ளனர். கடந்த டிசம்பர் 26 அன்று நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களுக்குத் தெரிய வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னதுரையின் உடனடியான தலையீட்டை தொடர்ந்து டிசம்பர் 27 அன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு சிலரின் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டதோடு, அந்த கிராமத்தில் இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய உடனடியான தலையீட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே சமயத்தில் இக்கொடிய சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இப்போது கைது செய்யப்படாமல் இருப்பதும் வருத்தமளிப்பதாகவே உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 2 அன்று ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துiறை கூடுதல் தலைமை செயலாளர் ஜகவர் தலைமையில் புதுக்கோட்டையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதும், ஜனவரி 13 அன்று சமூக நீதிக் கண்காணிப்புக்குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளே ஆகும் என கருதுவதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.01.2023) சட்டப் பேரவையில் அறிவித்துள்ளபடி மேற்படி இழிசெயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
தமிழகம் முழுவதும் பட்டியலின மக்கள் மீது இதுபோன்ற பல வகையான சமூக கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன. பல தடுப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை. வன்கொடுமை சட்டத்தை அமல்படுத்துவதிலும் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை. எனவே, தமிழக அரசு அனைத்து விதமான சமூக ஒடுக்குமுறைகளை களைந்திட தீண்டாமைக் கொடுமை இழைக்கும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
தீர்மானம் 4:
“எங்கள் எய்ம்ஸ் எங்கே”
என்ற முழக்கத்தோடு 24.01.2023 அன்று மதுரையில் போராட்டம்
ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதன் அடையாளமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு எந்தவித நியாயமும் இன்று வரை வழங்காமல் இருக்கிறது. 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு அறிவிக்கப்பட்ட மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் பணிகள் இன்றுவரை துவக்கப்படாமல் இருக்கிறது. இதற்கு ஒன்றிய அரசினுடைய அக்கறையின்மையும், மாற்றாந்தாய் மனப்போக்கே அடிப்படை காரணமாகும்.
எனவே, மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனடியாக துவக்கக் கோரி வரும் 24.01.2023 காலை 10 மணிக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் மதுரையில் தென்மாவட்டங்களைத் திரட்டி “எங்கள் எய்ம்ஸ் எங்கே” என்ற முழக்கத்தோடு “கைகளில் செங்கல் ஏந்தி” பெருந்திரள் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். ஒன்றிய அரசினை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு தர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 5 :
சிறு-குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க
கோவையில் மாநில மாநாடு
ஒன்றிய அரசின் நவீன தாராளமய கொள்கைகளால் தமிழகத்திலும் தொழில் நெருக்கடி தீவிரமாகியுள்ளது. சிறு-குறு நடுத்தர தொழில்கள் ஜி.எஸ்.டி. வரி உயர்வு, மூலப் பொருட்களின் விலையேற்றம், நூல்விலை உயர்வு, கடன் சுமை மற்றும் கடன் பெறுவதில் சிக்கல்கள், மின் கட்டண உயர்வு என பல தாக்குதல்களை எதிர்கொள்கின்றன. இதனால் கணிசமான நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை பாதிப்பதுடன் வேலையின்மையையும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடி தமிழக பொருளாதாரத்தை பாதித்துள்ளது. ஏற்றுமதி வளர்ச்சி குறைந்து போனதால் நாட்டின் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு இந்த தொழில்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் நிலைமையை மோசமாக்கிடும் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றி வருகிறது. மாநில அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மேலும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
இந்நிலையில் சிறு-குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க தமிழ்நாடு மக்கள் ஒன்றுபட்ட குரலை எழுப்பிட வேண்டும். தொழில் பாதுகாப்பு, சிறு-குறு நடுத்தர தொழில்களை நம்பியுள்ள உழைக்கும் மக்களின் வாழ்வாதார பாதுகாப்பை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தொழில் பாதுகாப்பு மாநில சிறப்பு மாநாடு கோயம்புத்தூரில் பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறும். இதில் மாநிலம் முழுவதிலிமிருந்தும், சிறு-குறு நடுத்தர தொழில் முனைவோரும், உழைக்கும் மக்களும் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்பார்கள். இவ்வாறு தனது அருகில் அவர் கூறியுள்ளார்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.