புகையில்லா போகி கடைப்பிடிப்பு
ஈரோடு மாநகராட்சியில் ஒரே நாளில்
20 டன் பழைய பொருட்கள் சேகரிப்பு
நகர் நல அலுவலர் பிரகாஷ் தகவல்
ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையின் பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் பழைய பொருட்கள், பழைய துணிகள் டயர்களை எரிக்கின்றனர். இதனால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது இதை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு போகி பண்டிகை என்பது பழைய பொருட்களை எரிப்பதற்கு பதில் அவற்றை சேகரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியின் சார்பில் புகையில்லா போகி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பழைய பொருட்கள் பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை மக்கள் போகி பண்டிகை என்று எரிக்கக் கூடாது அதற்கு பதிலாக அந்த பொருட்களை மாநகராட்சி சார்பில் வரும் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பணி நேற்று மாநகராட்சியில் தொடங்கியது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் 12 வார்டுகளில் இதற்காக தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மதியம் குப்பை தொட்டியுடன் ஒவ்வொரு வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களிடம் பொதுமக்கள் பழைய பொருட்களை கொடுத்து வருகின்றனர். மாநகரில் இந்த பணி இன்று 2-வது நாளாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:-
போகி பண்டிகை அன்று காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் புகையில்லா போகி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் காலையில் ஈரோடு மாநகராட்சி உட்பட்ட 60 வார்டுகளிலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறோம். தூய்மை பணியாளர்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை குப்பை தொட்டியில் போடுங்கள் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதைப்போல் ஒவ்வொரு நாளும் 12 வார்டு வீதம் 5 நாட்களில் 60 வார்டுகளில் பழைய பொருட்களை சேகரிப்பதற்காக தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மதியம் ஒவ்வொரு வீடாக சென்று பழைய பொருட்களை சேர்த்து வருகின்றனர். இந்த பணி நேற்று தொடங்கியது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் 60 வார்டுகளில் உள்ள பழைய பொருட்களை சேகரிக்க முடிவு செய்துள்ளோம். இதைப்போல் மாநகராட்சி உள்ள நான்கு மண்டலங்களிலும் 25 முக்கியமான இடங்களில் பழைய பொருட்களை சேகரிக்கும் வகையில் கலெக்சன் பாயிண்ட் வைத்துள்ளோம். இங்குள்ள குப்பைத்தொட்டியில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வந்து போடும்படி அறிவுறுத்தி உள்ளோம். இதற்குப் பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பழைய பொருட்களை குப்பை தொட்டியில் போட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மாநகராட்சியில் பகுதியில் 20 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள் குடியிருப்பு அசோசியேசன், அடுக்குமாடி குடியிருப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக தூய்மை இந்தியா இயக்கத்திற்கான பரப்புரையாளர்கள் 32 பேரை தனியாக நியமித்து 60 வார்டுகளிலும் விழிப்புணர் ஏற்படுத்தி வருகிறோம். இவர்கள் பள்ளிகள் குடியிருப்பு நலச்சங்கம் அசோசியேசன் சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தவிர மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள், என் .ஜி .ஓ.க்கள் மூலம் அந்தந்த வார்டு பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.