Type Here to Get Search Results !

ஈரோடு இடைத்தேர்தல்- ஆவணங்கள் இன்றி ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் பரிசு பொருட்கள் கொண்டு சென்றால் பறிமுதல்

ஈரோடு இடைத்தேர்தல்- ஆவணங்கள் இன்றி ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் பரிசு பொருட்கள் கொண்டு சென்றால் பறிமுதல்
ஈரோடு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியிட்டு உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தை விதிகள் அரசியலமைப்பு சட்டம், பிரிவு 324-ன்படி ஒரு தேர்தலை சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து சட்ட பாதுகாப்புகளும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல், தேர்தல் அறிவிப்பு வெளியான 18-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் குறித்துக் கீழ்க்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.


மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எந்தக்கட்சியும் அல்லது வேட்பாளரும், எந்த ஒரு சமய அல்லது மொழி அல்லது சாதியினரிடையே வேறுபாடுகளை தூண்டும் வகையில் எந்த வேண்டுகோளையும் விடுக்கக் கூடாது. வழிபாட்டிற்குரிய கோவில், மசூதி, தேவாலயம், குருத்துவாராக்கள் அல்லது பிற வழிபாட்டு தலங்களில் தேர்தல் குறித்த பிரச்சாரம் மற்றும் சுவரொட்டிகள் மற்றும் பாடல்கள் இசைத்தல் ஆகியவை செய்தல் கூடாது. பொதுவாக பள்ளிகள், கல்லூரி வளாகங்களில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை. பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியுடன் பள்ளி மற்றும் கல்லூரியின் அன்றாட பணிகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் பொதுக்கூட்டம் நடத்தலாம்.


வாக்காளர்களுக்கு பொருள், பணம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக்கோருதல், வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு முடிகிற 48 மணி நேர கால அளவில் பொதுக்கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குப் போய் வர போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் மற்றும் வாக்காளர் சின்னங்களை குறிக்கும் விதமாக எத்தகைய பொருட்கள் மற்றும் காகிதத்துண்டு சீட்டுகள் வழங்குதல் கூடாது. அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், பிற கட்சிகள் ஏற்பாடு செய்கின்ற கூட்டங்களில் இடையூறு விளைவிக்கக்கூடாது.


ஓர் அரசியல் கட்சி, வேட்பாளாரின் கடந்த கால சாதனைகள் மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். அவரது பொது நல நடவடிக்கைகளுக்கு தொடர்பற்ற சொந்த வாழ்க்கை குறித்த நிகழ்வுகள் பற்றியும் குறை கூறுவதைத் தவிர்த்தல் வேண்டும். ஒரு தனி நபரின் அரசியல் கருத்துகளுக்காகவும், நடவடிக்கைகளுக்காகவும் அவர்களுடைய வீடுகளுக்கு முன்பு ஆர்பாட்டம் அல்லது மறியல்களை நடத்தக்கூடாது. அரசியல் கட்சி வேட்பாளர் அவர்களுடைய தொண்டர்கள் எந்தவொரு தனி நபருடைய இடத்தில் அவருடைய அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், விளம்பரத்தட்டிகள் தொங்க விடுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கோஷங்கள் எழுப்புதல் கூடாது.


வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் மற்றும் முதன்மை முகவர் ஆகியோருக்கு பயன்படுத்தும் வாகனத்திற்கு உரிய அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் அனுமதி அளிக்கும் பொருட்டு விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதிலும் அவற்றிற்கு அனுமதிச் சீட்டுகளை பெறுவதிலும் அலுவலர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் அனுமதி அளிக்கப்பட்ட விவரத்தை தெளிவாக தெரியும்படி ஒட்டி வைக்க வேண்டும். வாக்காளர்கள் நீங்கலாக உரிய அடையாள அட்டை (வாக்குச்சாவடி முகவர்) இல்லாமல் எவரும் வாக்குச்சாவடிகளில் நுழையக் கூடாது. அமைச்சர்கள் அலுவல் முறை பயணம் செய்கையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது. மேலும் தேர்தல் பணிக்காக அரசு அதிகாரிகள் (அல்லது) பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. மைதானங்கள் முதலிய பொது இடங்களை தேர்தல் கூட்டம் நடத்துவதற்கு தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் ஒரே மாதிரியான வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் அவ்விடங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். மத்திய அல்லது மாநில அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச் சீட்டு எண்ணும் இடத்திற்குள் நுழையக் கூடாது. வேட்பாளர் அல்லது அவரது அனுமதி பெற்ற தேர்தல் முகவர் என்கிற முறையில் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்குள் சென்றிடலாம். தனியார் கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் அனுமதி ஏதும் பெறாமல் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. விளம்பரம் எழுதுதல் கூடாது. அவ்வாறு அனுமதியின்றி விளம்பரங்கள் எழுதுதல் குறித்து கட்டிட உரிமையாளர்கள் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம். பொது இடங்களில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு தடை விதித்திருப்பதால் பொது இடங்களில் மேற்படி வகையில் விளம்பரம் செய்ய வழிவகையில்லை என்பதையும் அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்படுகிறது. அரசு வளாகம் மற்றும் கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான அரசியல் கட்சியினரின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு பலகைகள் ஆகியனவற்றை அந்தந்த அரசு அலுவலக நிர்வாகத்தின் மூலமாக உடன் அகற்றப்பட வேண்டும்.


போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க ஏதுவாக அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் தாம் நடத்த உத்தேசித்துள்ள கூட்டத்தின் இடம், காலம் ஆகியவை குறித்து உரிய காலத்திற்கு முன்னதாகவே உரிய அனுமதி பெற வேண்டும். ஓர் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் கூட்டம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் ஏதேனும் கட்டுப்பாடுகள் அல்லது தடை உத்தரவுகள் செயலிலுள்ளனவா என்பதைப் பற்றி முன்னதாகவே அறிந்து அத்தகைய ஆணைகள் செயலிலிருந்தால் அவற்றை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். உத்தேசிக்கப்பட்ட கூட்டத்திற்காக ஒலி பெருக்கிகள் (அல்லது) வேறு பிற வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக அனுமதி அல்லது உரிமம் பெறுவதாக இருந்தால், கட்சி அல்லது வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு முன்கூட்டியே விண்ணப்பம் செய்து அத்தகைய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். ஒலிபெருக்கிகள் எக்காரணத்தை கொண்டும் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை உபயோகிக்கக்கூடாது. பிற அரசியல் கட்சியினரை அல்லது அவர்களுடைய தலைவர்களைக் குறிக்கிற கொடும்பாவிகளை எரித்தல் போன்றவற்றிலும், இதுபோன்ற பிற நடவடிக்கைகளிலும் ஈடுபடுதல் குறித்து எந்தவொரு அரசியல் கட்சியும் (அல்லது) வேட்பாளரும் செய்யக்கூடாது. தனிநபர் ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை எவ்வித ஆவணங்களும் இன்றி பணத்தை கொண்டு செல்லலாம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் ரொக்கமாக கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள், மது பானங்கள், பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படின் அவற்றை பறிமுதல் செய்யப்படும். தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களின்போது பிளாஸ்டிக் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைத்து வாகனங்களிலும் ஏதாவது கட்சியின் பெயர் சின்னம் மற்றும் கொடி ஆகியவை இருப்பின் அவை அகற்றப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டும் ஏதேனும் ஒரு கொடி, பேனர், பதாகை வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. அதே போல் வாக்குப்பதிவு அன்று அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் அமைதியாகவும், ஒழுங்காகவும் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேட்பாளர்கள் ஒப்புதல் பெற்ற முதன்மை முகவர் மற்றும் வாக்குப்பதிவு முகவர் ஆகியோர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.