திருமங்கலத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து திருவிழா
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத கறி விருந்து திருவிழா நடந்தது.
இதில், 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
திருமங்கலம் அருகே அனுப்பபட்டியில் காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது.
இந்த கோயிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.
இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்ட மாட்டார்கள்.
முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். இன்று காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர்.
பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன.
50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது.
சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருவர்.
இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.