மலைவாழ் மக்கள் கோரிக்கை!
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி, ஆசனூர், தலமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில், யானைகள் அதிகளவில் வசிக்கின்றன. அப்பகுதியில் மக்களை பயமுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி, ஆசனூர், தலமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள், விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பதற்காக, விவசாயிகள் தங்கள் தோட்டங்களைச் சுற்றி வனத்துறை அனுமதியுடன் மின் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் தீகினார், மரியாபுரம், தள்ளவாடி ஆகிய பகுதியில் கருப்பன் ஒற்றை யானை கடந்த சில நாட்களாக சுற்றி வருகிறது. இந்த கருப்பன் யானை மிதித்து வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த இருவர் இறந்துள்ளனர். இந்நிலையில் மரியாபுரத்தில் நேற்று இரவு கருப்பன் யானை அப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டை சுற்றி சுற்றி வந்ததுள்ளது. இதனால் அங்கு குடியிருந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை விரட்ட முயற்சித்தனர். ஆனால் வனத்துறையினரிடம் பட்டாசுகளோ, யானையை விரட்டுவதற்குரிய எந்தவித பொருட்களும் இல்லாததால் யானை அங்கேயே சுற்றி சுற்றி வந்தது.
எனவே அந்த கருப்பன் யானையை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் வனத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.