சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது யானை தாக்கியதால் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
ஈரோடு மாவட்டம்
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகேயுள்ள ஏலஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவருக்கு வசந்தி என்ற மனைவியும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்,
இந்நிலையில் பழனிச்சாமியும் அவரது நண்பர் நாகேஷ் என்பவரும் குன்றி பகுதியில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணியினை முடித்து விட்டு அவரவர் வீட்டுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்போது அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த வனப்பகுதியிலிருந்து தீடீரென காட்டு யானை ஒன்று நடந்து வருவதை பார்த்தனர்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நாகேஷ் உடனடியாக வாகனத்தை நிறுத்திய பின் சாலையில் தடுமாறி விழுந்து வேகமாக ஓடி அங்கிருந்த புதருக்குள் மறைந்துகொண்டார்.
அதே சமயத்தில் நாகேஷின் பின்னால் அமர்ந்து வந்த பழனிச்சாமி அந்த வாகனத்திலிருந்து குதித்து குன்றி நோக்கி செல்லும் சாலையில் ஓடிய போது அந்த நேரத்தில் பின்புறமாக வந்த மற்றொரு காட்டு யானை பழனிச்சாமியை மடக்கிப்பிடித்து துதிக்கையால் சுழற்றி சாலையில் வீசிய பின் அவரது தலை பகுதியை காலால் மிதித்து உடலை நசுக்கியது
இந்த சம்பவத்தில் யானையிடம் சிக்கிய பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்துடன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பழனிச்சாமியுடன் சென்ற நாகேஷ் சிறு காயங்களுடன் யானையிடம் இருந்து உயிர் தப்பிய நிலையில்,
ஊருக்குள் ஓடி வந்து நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து இது குறித்து காவல்துறைக்கு தெருவித்தபின் சம்பவம் இடத்திற்கு சென்ற கடம்பூர் போலீசார் மற்றும் கடம்பூர் வனச்சரகர் இந்துமதி ஆகியோர் இறந்து போன பழனிச்சாமி உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடம்பூர்- குன்றி செல்லும் சாலையானது அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால் பகலிலேயே யானை நடமாட்டம் உள்ளதால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், யானை தாக்கியதில் உயிரிழந்த பழனிச்சாமியின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தெரிவித்தார்.