கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய பசு மாட்டினை பத்திரமாக மீட்ட தீயனைப்பு வீரர்கள்.
கோபி அருகே உள்ள பொலவகாளிபாளையம் கல்லாங்காட்டு தோட்டதை சேர்ந்தவர் குமாரசாமி இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருவதுடன் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் விவசாயி குமாரசாமி தனது பசுமாடு ஒன்றை மேய்ச்சலுக்காக தனது தோட்டத்தில் விட்டிருந்த போது அந்த மாடு அங்கிருந்த கிணற்று பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தது.
பசுமாடு கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டு விவசாயி குமாரசாமி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றுக்குள் பார்த்த போது கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கோபி தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்பு வீரர்கள் பசுமாட்டினை மீட்பதற்கான முயற்சியில் இறங்கினர்.
இதனையடுத்து தீயனைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாட்டின் உடலை கயிற்றால் கட்டியபின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மேலே இழுத்து பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பசுமாட்டின் உடலில் கட்டப்பட்டிருந்த கயிற்றினை விடுவித்தபின் எழுந்து ஒடியதை கண்ட விவசாயி உரிய நேரத்தில் கிணற்றில் விழுந்த பசுமாட்டினை மீட்டுக்கொடுத்த கோபியை சேர்ந்த தீயனைப்பு வீரர்களுக்கு மகிழ்ச்சியோடு தனது நன்றியினை தெரிவித்தார்.