ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்துவது குறித்து மாண்புமிகு தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்டவருவாய் அலுவலர், உதவி ஆட்சியர், மற்றும் மருத்துவர், துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு முத்துசாமி கலந்து கொண்டு சுகாதாரத் துறை, வருவாய்த்துறை காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
கொரோனோ மீண்டும் வருமோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.
உலகின் சில இடங்களில் பாதிப்புகள் இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை,
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மற்றும் அவசியமான துறையினருடன் பேசி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் போதுமான அளவிற்கு படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் மொத்தமாக 3406 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கைகள் இருக்கின்றன.
அதை மேலும் 400 படுக்கைகள் அளவிற்கு அதிகரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த முறை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக திடீர் பின்னடைவு ஏற்பட்டது.
தற்பொழுது அதையும் எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும்,
சோதனைகள் செய்து கொள்ள வேண்டும் அதிகாரிகளிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும்.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாங்களாக முன்வந்து பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்,
இதை பொதுமக்களுக்கு வேண்டுகோளாக வைக்கின்றேன். தடுப்பூசி இரண்டாம் தவணை போடாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும்
பூஸ்டர் தடுப்பூசி ஈரோடு மாவட்டத்தில் 16 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர் அவர்களும் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை கண்காணிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் குழந்தைகள் நான்கைந்து நாட்களுக்கு வரவில்லை எனில் அதற்கான காரணத்தை கண்டறிந்து ஆராய்வதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தாங்களாக முன்வந்து மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும்
இதை வேண்டுகோளாக வைக்கின்றேன். கடந்த முறை போல கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவிற்கு இன்னும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை அதிகாரிகளும் ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்