ஈரோட்டில் ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனை, கருத்தரித்தல் மருத்துவமனையின்
ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு
ஈரோடு, டிச. 30: ஈரோட்டில் தனியார் கருத்தரித்தல் மருத்துவமனையில் அனுமதியின்றி ஸ்கேன் சென்டரை இயக்கி வந்த புகாரின் அடிப்படையில் சீல் வைத்து மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். (தனியார் மருத்துவமனை பெயர்- ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனை, கருத்தரித்தல் மையம்)
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சத்தி சாலையில் தனியார் மகளிர் மருத்துவமனை மற்றும் செயற்கை கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டர் உரிமம் இன்றி இயங்கி வருவதாக ஈரோடு கலெக்டர் தலைமையிலான மருத்துவ கண்காணிப்பு குழுவிற்கு புகார் வந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்திட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதன்பேரில், ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இக்குநர் பிரேமகுமாரி தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் நேற்று ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனை, கருத்தரித்தல் மையம் மருத்துவமனையிலும், கருத்தரித்தல் மையம், ஸ்கேன் சென்டரில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, புகார் வந்த தேதியில் ஸ்கேன் சென்டருக்கு எவ்வித அனுமதியும், உரிமமும் பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஸ்கேன் சென்டருக்கு உரிமம் பெற்றுள்ளதை அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் அதிகாரிகளிடம் காண்பித்து, விளக்கம் அளித்தனர். ஆனால், மருத்துவ துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட தேதியில் ஸ்கேன் சென்டரை எவ்வித அனுமதி மற்றும் உரிமம் இன்றி இயக்கியது குற்றம் என கூறி வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் சம்மந்தப்பட்ட ஸ்கேன் இயந்திரத்திற்கும், ஸ்கேன் சென்டருக்கும் சீல் வைத்தனர். மேலும், அனுமதியில்லாமல் ஸ்கேன் சென்டரை இயக்கியது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் வழங்கினர். இந்த தனியார் மருத்துவமனையின் கிளைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடகா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, தெலுங்கானா பல்வேறு வெளிமாநிலங்களிலும், பங்களாதேஷ், இலங்கை, மொரிசியஸ் என வெளிநாடுகளிலும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.