பெரியார் பிறந்த மண்ணில் மாட்டிறைச்சிக்கு தடையா!
பெரியார் பிறந்த மண்ணில் மாட்டிறைச்சிக்கு தடையா!
ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் முறையீடு
ஈரோடு, டிச. 19-
பெரியார் பிறந்த மண்ணில் மாட்டிறைச்சிக்கு தடையா என மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ததீஒமுன்னணியினருடன் மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்டம், சக்தியமங்கலம் வட்டம், புளியம்பட்டி நகராட்சியில் உள்ள வார சந்தை உள்ளது. இதில் இறைச்சிக்கடைகளும் இடம் பெற்றிருந்தது. பட்டியலின சமூகத்தை சேர்ந்த சுமார் 11 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு மாட்டு இறைச்சி கடை நடத்தி வந்தனர். இவர்கள் அனைவரும் சாதாரண ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாட்டிறைச்சி கடையில் உப தொழிலாளர்களாக 50 பேர் ஈடுபட்டு வந்தனர். இந்த கடைகளை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த 22.11.2022 அன்று அதிகாலை புல்டோசனை வைத்து இடித்து தரமட்டம் ஆக்கியது.
இது குறித்து இடிக்கப்பட்ட கடைகளை கட்டிக் கொடுக்கவும், இடிக்கப்பட்ட கடைகளுக்கு இழப்பிடு வழங்கவும், நிரந்தரமாக இறைச்சிக்கூடம் கட்டும் வரை எவ்வித தடையுமின்றி இக்கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தொடர் உண்ணாவிரதத்திற்கும் அழைப்பு விடப்பட்டது. இதற்கிடையில் நகராட்சி ஆணையர் பாதிக்கப்பட்டவர்களையும், ததீஒமு நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, நிரந்தர தீர்வாக நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 3 மாத காலத்திற்குள் இறைச்சி கூடங்கள் கட்டி கொடுக்கப்படும் என கடந்த 10ஆம் தேதி ஒப்பந்தமானது.
ஆனால் நிரந்தரமாக செயல்பட கடைகள் கட்டி முடிக்கப்படும் வரை சந்தையில் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் திங்களன்று மனு கொடுத்தனர். அப்போது, பெரியார் மண்ணில் மாட்டிறைச்சிக்கு தடையா, மாட்டிறைச்சி விற்பனையில் உலகில் இந்தியா முதலிடம் வகிக்கும் நிலையில் புளியம்பட்டியில் தடையா என்ற பதாகைகளை ஏந்தி வந்தனர். இதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட செயலாளர் ப.மாரிமுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, சுப்ரமணி, ஏ.பி.ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படம் உள்ளது.