ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று ஈரோடு வீரப்பன்சத்திரம் சாஸ்திரி நகரை சேர்ந்த சாமியாத்தாள் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார் .
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கனிராவுத்தர் குளம் பகுதி அருகே தள்ளு வண்டியில் பழக்கடை நடத்தி வருகிறேன். ஈரோடு சின்ன சேமூரை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவரும் கனிராவுத்தர் குளம் பகுதி அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த நபர் தான் ஏல சீட்டு நடத்தி வருவதாகவும் மேற்படி ஏல சீட்டில் தன்னையும் சேர்த்துக் கொள்வதாகவும் கூறினார். மேலும் ஏல சீட்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டது என்றும், நல்ல லாபம் கிடைக்கும் என்றும் அவர் ஆசை வார்த்தை கூறினார். 2 லட்சம் சீட்டு மொத்தம் 20 ஏலம் என்றும், ஏலத்தொகை மாதம் 10 ஆயிரம் என்றும் ஒவ்வொரு மாத ஏலத்திற்கு ஏற்ப தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறினார். இதனை நம்பி நானும் கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரி மாதம் 25ஆம் தேதியிலிருந்து ரூ.2 லட்சம் ஏல சீட்டில் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தி வந்தேன். மேலும் 25.9.2021 தேதியில் மற்றொரு ரூ.2 லட்சம் லை சீட்டு நடத்தி வருவதாகவும் அதிலும் தன்னை சேர்த்துக் கொண்டார். அந்த ஏல சீட்டிலும் நான் சேர்ந்து அதற்கும் ரூபாய் கட்டி வந்தேன். இவ்வாறாக ரூ.4 லட்சம் வரை ஏல சீட்டில் கட்டினேன். அந்த நபரிடம் மொத்த தொகை கேட்டதற்கு காலம் கடத்தி வருகிறார். தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டதற்கு சரியாக பதில் கூறாமல் மோசடி செய்து வருகிறார். மேலும் என்னை மிரட்டியும் வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து என்னிடமிருந்து பெற்ற ரூ.4 லட்சத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் அந்த நபர் நடத்திய ஏல சீட்டில் ரூ.6 லட்சம் வரை பணம் கட்டி ஏமாந்த பாதிக்கப்பட்ட 4 பேரும் இன்று எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர்.