Type Here to Get Search Results !

நெற்கதிர்களை தாக்கும் நெல் பழ நோயை கட்டுப்படுத்தும் முறைகள்; அதிகாரி விளக்கம்

நெற்கதிர்களை தாக்கும் நெல் பழ நோயை கட்டுப்படுத்தும் முறைகள்; அதிகாரி விளக்கம்
கோபி நெற்கதிர்களை தாக்கும் நெல் பழ நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். நோய் தாக்க வாய்ப்பு கோபி வட்டாரத்தில் கீழ்பவானி பாசனப்பகுதிகளில் நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது நிலவி வரும் பனி மற்றும் தொடர் மழை காரணமாக நெற்கதிர்களை நெல் பழ நோய் தாக்க வாய்ப்பு உள்ளது எனவும் அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- நெல் பழ நோய் என்பது பூஞ்சாண நோயாகும். இந்நோயின் அறிகுறிகள் நெற்கதிர்கள் முதிர்ச்சி அடையும் சமயத்தில் தென்படும். இது பூக்கும், பால் பிடிக்கும் மற்றும் கதிர் முற்றும் தருணங்களில் நெல் பயிரை தாக்கி பெருமளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இந்நோய் தாக்கப்பட்ட விதைகள் மூலமாகவோ, மண்ணில் காணப்படும் பூஞ்சாண வித்துக்கள் மூலமாகவோ, காற்றின் மூலமாகவோ, நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து மற்ற வயல்களுக்கு பரவுகிறது.
காரணம் பூக்கும் தருணங்களில் தொடர் மழை மற்றும் ஈரப்பதமே இந்நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். பலத்த காற்று நோய் காரணியின் ஸ்போர்கள் பக்கத்து வயல்களுக்கு பரவுவதற்கு முக்கிய காரணமாகும். பொதுவாக ஒரு நெல் கதிரில் சில மணிகளே முதலில் பாதிக்கப்படுகின்றன. பின்னர் மஞ்சள் நிற வெல்வெட் பழங்கள் போன்று மாறுகின்றன. பந்து போன்ற கரிப் பூட்டைகள் முதலில் சிறியதாக இருந்து, பின்னர் ஒரு சென்டிமீட்டர் அளவு வளர்ந்து விடும். கரிப் பூட்டை கதிர் முழுவதும் பரவி பின்னர் கரும்பச்சை நிற வெல்வெட் பந்து போன்று காட்சி அளிக்கும். கட்டுப்படுத்தும் முறைகள் இந்நோயை கட்டுப்படுத்த வயல் வரப்புகளை களைகளின்றி சுத்தமாகவும், பயிர்களை தொடர் கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தேவைக்கு அதிகமாக யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை இடக்கூடாது. நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணாடி இலைப்பருவத்தில் ஒரு முறை மற்றும் பூக்கும் தருணத்தில் ஒரு முறை என இரு முறை ஏக்கருக்கு காப்பர் ஹைட்ராக்சைடு மருந்து 200-கிராம் அல்லது புரபிகோனசோல் மருந்து 200 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். நோய் அறிகுறிகள் தென்பட்ட பிறகு இந்நோயினை கட்டுப்படுத்த இயலாது என்பதால் வரும் முன்னர் காப்போம் என்ற அடிப்படையில் பஞ்சு கட்டு பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் 2 முறை மேற்கண்ட பூஞ்சாண மருந்துகளை தெளிப்பதன் மூலம் இந்நோயை திறம்படக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.