அமைச்சராக பதவியேற்ற உதயநிதி..! முதலில் கையொப்பமிட்ட மூன்று முக்கிய கோப்புகள்..! என்ன தெரியுமா.?
December 14, 2022
0
அமைச்சர் நாற்காழியில் உதயநிதி
தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து தலைமைசெயலகத்திற்கு சென்ற உதயநிதி தனது அறைக்கு சென்றார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் உதயநிதியை நாற்காழியில் அமரவைத்தனர். இதனையடுத்து தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு வீரர்களின் நலனிற்காகவும் மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் போது, “ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2022-23ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பாட்டத்தினைச் சேர்த்திடவும், முந்தைய காலங்களில் ஒரே ஒரு பிரிவில் மட்டுமே 10 விளையாட்டுக்களில் மாநில போட்டிகள் நடத்தப்பட்டன.
தற்போது பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெறும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கி, 16 பிரிவுகளில் போட்டிகள் நடத்திடும் வகையிலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை ரூ.47,04,72,800/- செலவில் நடத்திடவும், இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் குழு ஆகிய குழுக்களை அமைத்திட கோரும் கோப்பில் கையொப்பமிட்டார்.
நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்:
நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கபடி விளையாட்டு வீரர்களான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. எச். ஜாஃபர், திரு. கே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்ததிரு. ஏ. கிறிஸ்டோபர், வலுதூக்கும் வீரர்கள் (Power lifting) சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஜி. பொன்சடையன், உள்ளிட்ட ஒன்பது விளையாட்டு வீரர்களுக்கு 1.3.2022 முதல் 1.8.2022 வரை மாதம் ரூ.3000/- ஓய்வூதியம் வழங்குவதற்கும், 2.8.2022 முதல் ஆயுட்காலம் வரை மாதம் ரூ.6000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.
துப்பாக்கிச்சுடும் வீராங்கனைக்கு ஊக்க தொகை
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (International Shooting Sports Federation) சார்பில் பெரு நாட்டின், லிமா நகரில் 27.9.2021 முதல் 10.10.2021 வரை நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 25 மீட்டர் Standard Pistol பெண்களுக்கான தனிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி நிவேதிதா அவர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து, ஒன்பது விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளையும், செல்வி நிவேதிதா அவர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையினையும் வழங்கினார்.
Tags