கோபிசெட்டிபாளையம்
ஆடு திருடி மாட்டிக்கொண்ட இளைஞனை ஊர் மக்கள்
கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி
கோபிசெட்டிபாளையம் அருகே அடுத்தடுத்து நடைபெற்று வரும் திருட்டு சம்மவங்களால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தற்போது ஆடு திருட வந்த இளைஞனை சுமார் ஒரு கி.மீ தூரம் துரத்தி சென்று பிடித்த பின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
.
கோபி அருகே கொளப்பலூர்,
கெட்டிசெவியூர், மல்லிபாளையம் உள்ளிட்ட சுமார் 5 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 10 நாட்களாக சுமார் 5 க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்து உள்ளது.
இதன் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் தூக்கமின்றி அச்சத்துடன் இருந்து வநதனர்.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து சிறுவலூர் போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தநிலையில் கொளப்பலூர் அருகே சன்னகுழி என்ற கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் சாலையோரத்தில் கெளரி என்பவர் வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை பிடித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்ப முயன்றனர்.
அப்போது ஆடு சத்தமிடுவதை கேட்டு வெளியில் வந்து பார்த்த கெளரி அருகில் இருந்தவர்களின் அழைத்து திருடர்களை பிடிக்குமாறு கூறியவுடன் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி செல்லும் இளைஞர்களை துரத்தி சென்று வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ஒருவனை கீழே தள்ளி பிடித்தனர்.
இதில் திருட வந்த மற்றொருவன் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற நிலையில் பிடிபட்ட இளைஞனை ஊரில் உள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் போலீசார் அந்த இளைஞனை மீட்க்கும் நடவடிக்கையில் இறங்கிய போது தொடர்ந்து இப்பகுதியில் திருட்டில் ஈடுபட்டுவரும் திருடர்களை பிடிப்பதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள் நாங்கள் பிடித்து வைத்த திருடனையும் காப்பாற்ற பார்க்கிறீர்கள் என பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் கிராம மக்களிடம் சிக்கியிருந்த திருடனை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
ஆடு திருடி மாட்டிக்கொண்ட இளைஞனை ஊர் மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுக்கும் வீடியோ கோபி பகுதியில் தற்போது வைரலாகி வருகிறது.