Type Here to Get Search Results !

மாபெரும் மூன்று அம்ச கோரிக்கை மாநாடு - பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அறிவிப்பு!

 மாபெரும் மூன்று அம்ச கோரிக்கை மாநாடு - பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அறிவிப்பு!
திருப்பூரில் ஜனவரி 30
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, நிஜாம் முகைதீன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருத்தின், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக்,T.ரத்தினம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்ததாவது;
   
1.திருப்பூரில் ஜனவரி 22ல் மாபெரும் மூன்று அம்ச கோரிக்கை மாநாடு

மாநில பட்டியலிலிருந்த கல்வியானது, அவசர காலத்தின் போது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அவசர காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பல சட்டங்கள் பிற்காலத்தில் மாநில பட்டியலுக்கு மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கல்வி மட்டும் தொடர்ந்து பொதுப்பட்டியலில் நீடித்து வருகின்றது. இதனால் மாநில அரசின் கல்வி ரீதியிலான சமூகநீதி கொள்கைகளை ஒன்றிய அரசின் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்து விடுகின்றன. ஒன்றிய அரசின் இந்த தலையீடு மாநில அரசின் சுயாட்சிக்கு எதிராக அமைந்துள்ளது. ஆகவே, கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

அதேபோல், அண்மைக்காலமாக தமிழகத்தின் பல்வேறு தனியார் நிறுவனப் பணிகளில் தமிழர் அல்லாத பிற மாநிலத்தவர்களே அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது இந்த எண்ணிக்கை என்பது அதிகரித்து வருவதை காண முடிகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது இல்லாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசின் சலுகைகளைக் கொண்டு, தமிழகத்தின் வளங்களை மூலதனமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காமல் பிற மாநிலத்தவர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை அளிப்பது என்பது ஏற்புடையதல்ல. ஆகவே, பல்வேறு மாநிலங்களில் தங்கள் சொந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஏற்படுத்தியுள்ள சட்டங்களைப் போன்று, தமிழக அரசும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்ற வேண்டும்.

அதேநேரத்தில் தமிழர் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை காக்கும் வகையில், அவர்கள் மீதான சுரண்டல்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய, அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அந்நிய செலவாணியை ஈட்டித் தரக்கூடிய கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்குமண்டல தொழில் நகரங்களில் நசிந்துவரும் தொழில் வளத்தை அரசு பாதுகாத்திட வேண்டும். ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, ஜி.எஸ்.டி. வரி வசூல், நிலையற்ற மூலப்பொருட்கள் விலையுயர்வு போன்றவை கொங்கு மண்டல தொழில் நகரங்களை முடக்கி வருகின்றன. ஆகவே, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு முழுமையான ஜிஎஸ்டி வரி விலக்கு அளித்தும், அதிகளவிலான உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் கொங்குமண்டலத்தின் தொழில் வளத்தை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட இந்த மூன்று முக்கியமான தமிழகத்தின் வாழ்வாதார கோரிக்கைகளையும் வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொங்கு மண்டலம் சார்பாக எதிர்வரும் ஜனவரி 22, 2023 அன்று திருப்பூரில் மாபெரும் மூன்று அம்ச கோரிக்கை மாநாட்டை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழர்களின் வாழ்வாதார கோரிக்கைக்காக நடைபெறும் இந்த மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

2.ஆவின் பொருட்கள் விலையேற்றத்தை கைவிட வேண்டும்:

தமிழகத்தில் ஆவின் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு என தொடர் விலை உயர்வுகள் ஏழை-எளிய மக்களை மிகவும் பாதிக்கின்றன. 

ஆவின் பால், ஐஸ்கிரீம், தயிர், நெய், வெண்ணெய் என ஆவின் பொருட்கள் ஒவ்வொன்றாக விலை உயர்ந்து வருகின்றன. இந்த விலைவாசி உயர்வானது தனியார் பால் நிறுவனங்களின் பால் விலையேற்றத்துக்கும், உணவங்களில் விலைவாசியேற்றத்துக்கும் வழிவகுக்கிறது. இது மக்களை வெகுவாக பாதிக்கிறது.

ஆவின் நிறுவனப் பொருட்களை விட தனியார் பால் நிறுவனப் பொருட்களே தமிழத்தில் பரவலாக விற்கப்படும் சூழலில், இந்த விலைவாசி ஏற்றம் என்பது மிகப்பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, தமிழக அரசு பொதுமக்களின் நலன்கருதி இத்தகைய விலைவாசி ஏற்றத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

3.பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்:

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட 150 நாட்களாக ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூரில் விமான நிலையம் அமைய திட்டமிட்டுள்ள பகுதிகள் பெரும்பாலும் குடியிருப்புகளும், விவசாய விளைநிலங்களும், ஏராளமான நீர்நிலைகளும் நிறைந்த பகுதிகளாகும் என்பதால் அப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். 

பரந்தூரில் இப்போது திட்டமிட்டுள்ள விவசாய நிலம் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் விமான நிலையம் அமைந்தால் சென்னை அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அடையாறு வடிகால் பகுதியில்தான் விமான நிலைய கட்டுமான பணிகள் அமைய உள்ளதாக தெரிவித்து 31 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். விமான நிலையம் அமையப் பெற்றால் அதை சுற்றிலும் நகரமயமாக்களும் ரியல் எஸ்டேட் போக்குவரத்து வசதிகள் என சுற்றிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கனமழை வெள்ளத்தை தமிழகம் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றது. கடலூர்-சென்னை வரையிலான பகுதிகளே பெரும்பாலும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் அது விவசாய நிலங்களை அழிப்பது மட்டுமல்லாது, பெருவெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கையையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டு திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

4.பொது சிவில் சட்டம் பன்மைத்தன்மை கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும்:

வெறுப்பு அரசியல், பிரிவினை அரசியல் செய்து வரும் பாஜக இப்போது பொது சிவில் சட்டத்தை பற்றி பேசத் தொடங்கியுள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பான தனிநபர் மசோதாவை கொண்டுவர பாஜக காய் நகர்த்தி வருகின்றது.

பல்வேறு மதம், கலாச்சாரம் மற்றும் ஜாதிகள் தங்கள் சொந்த கலாச்சாரம், குறியீடு மற்றும் மரபுகளைக் கொண்ட இந்திய நாட்டில், பொது சிவில் சட்டம் என்பது பன்மைத் தன்மை தேசத்தின் கலாச்சாரம், பாரம்பரிய மரபுகளை அழித்துவிடும். இது நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதோடு, மக்களின் மத மற்றும் கலாச்சார சுதந்திரத்தையும் மறுக்கிறது.

ஒரு ஜனநாயகத்தில், குடிமக்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் மரபுகளை அரசியல் சாசனத்தால் உத்தரவாதப்படுத்தியதைப் பின்பற்றவும், தொடரவும் உரிமை உண்டு. அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மரபுகளைச் சேர்ந்த மக்களின் ஒருமித்த கருத்து இல்லாமல் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்த முடியாது. எனவே, பாசிச சக்திகளின் பொதுசிவில் சட்ட அறைகூவலை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிக்கிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதற்கெதிராக ஜனநாயக சக்திகள் குரல் எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

5.ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இழுத்தடிக்கும் ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது:

மக்களின் உயிர் மற்றும் பொருளாதார தொடர்புடைய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதாவுக்கு ஓப்புதல் வழங்காமல், தடை செய்யப்பட்ட விளையாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்துவரும் தமிழக ஆளுநரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் கடந்த ஒன்றரை ஆண்டில் 38 பேர் வரை தற்கொலை செய்துள்ளனர். இதில் பெண்களும், கல்லூரி மாணாவர்களும் அடக்கம் என்பது வேதனையானது. இத்தகைய சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து இன்னும் எத்தனை உயிர்களை ஆளுநர் காவுவாங்கப் போகிறார். 

ஆளுநரின் இந்த நடவடிக்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் செயல்பாட்டை தடுக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் மக்கள் நலன் சார்ந்த, மாநில நலன் சார்ந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கும் போக்கு என்பது ஏதேச்சதிகாரமான நடவடிக்கையாக தெரிகிறது. ஆகவே, தமிழக ஆளுநர் உடனடியாக தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.