ஆற்றங்கரையோரம் தொடர்ந்து
வசிக்க எங்களுக்கு அனுமதி :
பவானி பசுவேஸ்வரர் வீதி மற்றும் ஜங்கமர் வீதியை சேர்ந்த பொதுமக்கள், பவானி நகராட்சி 20 ஆவது வார்டு உறுப்பினர் கு.கல்பனா தலைமையில் அளித்த மனு விவரம்:பசுவேஸ்வரர் வீதி மற்றும் ஜங்கமர் வீதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு தலைமுறையை தாண்டி காவிரி ஆற்றங்கரையோரம் குடியிருந்து வருகிறோம்.
இந்த சூழ்நிலையில் ஒரு மாத காலத்திற்குள் வசிப்பிடத்தை காலிசெய்து, புறநகர் பகுதியில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்குச் செல்ல வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தவிர காவிரியில் அதிக அளவில் தண்ணீர் வந்தாலும் குடியிருப்புகளில் புகுந்த தண்ணீர் 2 அல்லது 3 நாள்களிலேயே வடிந்து விடுகிறது. இதனால் பவானியில் காவிரி ஆற்றங்கரையோரம் பசுவேஸ்வரர் தெரு, ஜங்கமர் தெரு மக்களின் வாழ்வாதரம் கருதி குடியிருப்புகளை காலிசெய்யச் சொல்லும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும். வரும் காலத்தில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தாலும் அரசிடம் நாங்கள் நிவாரணம், உதவி கோர மாட்டோம்.நாங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றால் குமாரபாளையத்துக்கு தறி, தார் ஓட்டும் பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து பவானி செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
தவிர மீன்பிடி தொழில் செய்பவர்கள் 10 கி.மீ தொலைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துகொண்டு தினமும் ஆற்றுக்கு வந்து செல்ல முடியாது. ஆற்றங்கரை அருகில் குடியிருக்கும்போதே பரிசல்கள், மீன்பிடி வலைகள் அடிக்கடி திருட்டு போய் விடுகிறது. இதனால் நாங்கள் இங்கேயே வசிக்க மாவட்ட நிர்வாகம்
உதவ வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்கள்