Type Here to Get Search Results !

ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைப்பது குறித்து ஆய்வுமேற் கொள்ளப்படும் அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க்க அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை இன்று அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார் பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். எனவே எனக்கும் அந்த விருப்பம் உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பேருந்துகள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அங்கு நிற்கும். இதேபோன்று சத்தி, கோபி பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் நிற்க கனி ராவுத்தர் குளம் அருகே மற்றொரு பேருந்து நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இடம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இடம் வாங்கப்பட்டு அங்கும் பேருந்து நிலையம் அமைக்கப்படும். எனவே ஒரே சமயத்தில் இரண்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. பின்னர் அவைகள் நிரந்தர பேருந்து நிலைய கட்டிட வசதியுடன் அமையும். அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகளை வரும் ஜனவரி 15-க்குள் முடிக்க அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எங்களது ஆட்சியில் பணிகள் காலதாமதமாவதாக அதிமுக கூறுவதில் அர்த்தம் இல்லை. 90 சதவீத பணிகள் முடிந்த போதும் 10 சதவீத பணிகள் நடைபெறாமல் இருந்தது. இதற்காக பைப்புகள் போடும் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கலந்து பேசி இப்பொழுது போடப்பட்டு வருகின்றன .90 சதவீத பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் முடிந்திருந்தால் ஏன் அவர்கள் விவசாயிகளிடம் பேசி மீதி உள்ள 10 சதவீதம் பணிகளை முடிக்கவில்லை. மொடக்குறிச்சி பேரூராட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. அங்கு பாஜகவினருக்கும் மற்றவர்களுக்கும் வாய் வார்த்தை சண்டையில் முடிந்துள்ளது. சட்டப்படி போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் அன்னூர் பகுதியில் சிப்காட் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. ஆனால் பவானிசாகர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலையின் கழிவு நீர் வரும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தொழில் வளர்ச்சி இன்றியமையாதது. பல சாலைகள் வசதிகள் உருவாக்கப்படும் . விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அங்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். முழுக்க முழுக்க நஞ்சை விவசாய நிலங்கள் எடுக்கப்படாது. அரசின் நிலமும் இருக்கும் .புஞ்சை பூமியும் இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பெருந்துறை பகுதியில் ரயில்வே குட்செட் அமைப்பதற்கு விவசாயிகள் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்பிரச்சனையும் ஆய்வில் உள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. அப்பணிகளை வரும் ஜனவரி 15க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகரம் அச்சரப்பாக்கம் மற்றும் அரக்கோணம் வரையும் விரிவுபடுத்தப்படுகிறது. இதனால் மக்களுக்கு பல அடிப்படை வசதிகள் உருவாகும். வளர்ச்சி மேலும் துரிதப்படும். எனவே தற்போது சென்னையில் உள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் அலுவலகங்கள் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் புதிதாக உருவாக்கப்படும். ஈரோடு மாநகராட்சி எல்லை பகுதி தேவை அடிப்படையில் வரிவுபடுத்தப்படும். புதிதாக ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால் ஏற்கனவே முந்தம்பாளையம் வீட்டு வசதி வாரியபகுதியில் பல மனைகள் விற்பனையாகாமல் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், துணை மேயர் செல்வராஜ், திருமகன் ஈ வெரா எம்எல்ஏ பலர் உடன் இருந்தனர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.