கோபிசெட்டிபாளையம் அருகே ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு
வந்த தனியார் காகித ஆலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிப்பதாகவும் ஆலையை மீண்டும் திறக்க கோரியும் கோபி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காகித ஆலை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த ஆலையின் கழிவு நீரால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி விவசாயிகள் சிலர் நடத்திய போராட்டத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஆலையை தற்காலிகமாக மூடியது.
அதனைத்தொடர்ந்து மூடபட்ட காகித ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருவதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு
ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆலை ஊழியர்கள்
கோபி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இது குறித்து ஆலையில் பணி புரிந்த ஊழியர்கள் தெரிவிக்கையில்
முறையான அனுமதிபெற்று இயங்கி வந்த ஆலையை மூடியதால்
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.