மும்பை, மராட்டிய மாநிலத்தின் நாக்பூர் - பிலாஸ்பூர் இடையேயான அதிவேக வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது 6-வது வந்தே பாரத் ரெயில் ஆகும். இதனை தொடர்ந்து நாக்பூரில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் சேவையை அவர் தொடங்கி வைத்ததுடன் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், நாக்பூர் - ஷீரடி விரைவு சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல், நாக்பூரில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஒட்டுமொத்தமாக நாக்பூரில் இன்று ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில், இந்த நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி மராட்டியத்தின் நாக்பூருக்கு வந்தார். நாக்பூர் விமான நிலையத்தில் அவருக்கு மாநில அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்தில் 'டிரம்ஸ்' இசைக்கருவி மூலம் மேளம் இசைக்கப்பட்டது. விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடி அங்கு தன்னை வரவேற்க காத்திருந்த 'டிரம்ஸ்' இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து 'டிரம்ஸ்' மேளம் இசைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.