ரீடு சமூக சேவை நிறுவனம் சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்தினை வலியுறுத்தி கோபியில் நடைபெற்ற மாரதான் போட்டியில் நூற்றுக்கணக்கான பெண்களும் மாணவர்களும் உற்சாகமாக பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இயங்கி வரும் ரீடு சமூக சேவை நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்தினை வலியுறுத்தி ரீடு நிறுவனம் சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்கும் மாரதான் போட்டி கோபி PKR பெண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ரீடு நிறுவனங்களின் இயக்குனர் கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோபி நகர்மன்ற தலைவர் நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாரதான் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாரதான் போட்டியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கோபி நகரின் முக்கியசாலைகள் வழியாக கோபி கலைக் கல்லூரி வரை சென்று மீண்டும் போட்டி துவங்கிய இடத்தை அடைந்தனர்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் கீதாநடராஜன் மற்றும் ஆணைக்கொம்பு ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியற்கு பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஹரிகரன் டி.என் .பாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் பாரியூர் ஊராட்சிமன்ற தலைவர் கிருபா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.