ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவிற்கு உட்பட்ட மயிலம்பாடி, சலங்கபாளையம் அ, ஆ, கவுந்தப்பாடி அ,இ, ஆப்பகூடல், மேட்டுப்பாளையம் ஆ, சிங்கம்பேட்டை, புன்னம், ஒரிச்சேரி, கல்பாவி, செட்டிபாளையம், கேசரிமங்கலம், வைரமங்கலம் என 14 இடங்களில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் பணி காலியாக உள்ளது. இந்த 14 இடங்களில் பணியிடங்கள் பூர்த்தி செய்ய கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப் பட்டது. பவானி தாலுக்கா–வில் 14 காலி பணி இடங்களுக்கு 1235 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 1067 விண்ணப்பங்கள் தகுதி பெற்றது. நவம்பர் மாதம் 30-ந் தேதி நடந்த எழுத்து தேர்வில் 810 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு பவானி தாலுக்கா அலுவலக வளாகத்தில் நேற்று முதல் நேர்காணல் தொடங்கியது. 28-ந் தேதி முதல் விடுமுறை நாள் தவிர 10 நாட்கள் காலை 40 பேர் மற்றும் மாலை 40 பேர் என இருவேளையும் 80 பேர் நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நேர்காணலில் சான்றிதழ்கள் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் பவானி தாசில்தார் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தில்ராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் ஆகியோர் விண்ணப்பதாரர்களிடம் நேர்காணலில் ஈடுபட்டனர். ரூ.11,500 அடிப்படை சம்பளம் எனவும், ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்ட இந்த உதவியாளர் காலி பணியிடங்களுக்கு அதிக அளவில் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல் மொபட் இல்லாதவர்கள் சைக்கிள் ஓட்ட தெரிந்தவர்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தால் 5 மார்க் என நிர்ணயம் செய்யப்பட்டு நிலையில் பலரும் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர்.