ஈரோட்டின் பிரதான பகுதியில், 12.66 ஏக்கர் நிலத்தை அனுபவித்து வந்த, சி.எஸ்.ஐ., அறக்கட்டளை நிர்வாகம், அந்த இடத்தை அரசிடம் ஒப்படைக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவுக்கு அருகில் உள்ள, 12.66 ஏக்கர் நிலத்தில், சி.எஸ்.ஐ., அறக்கட்டளை நிர்வாகம், கல்விக்கூடம், விடுதிகள், மருத்துவமனைகள் கட்டி, சமூக சேவை செய்து வருகிறது. அங்கு சர்ச்சும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது, 100 ஆண்டுகளுக்கு முன், அந்த நிலத்தை அரசிடம் இருந்து ஏலம் எடுத்தது போன்ற ஆவணத்தை, சி.எஸ்.ஐ., அறக்கட்டளை நிர்வாகத்தினர் வைத்து உள்ளனர். அந்த நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி, பட்டா போட்டு கொடுக்க வேண்டும் எனக் கேட்க, 2010ல் ஈரோட்டில் இருந்த சர்வே மற்றும் செட்டில்மென்ட் அலுவலர், பட்டா போட்டு கொடுத்து விட்டார்.
அதன் பின், ஈரோட்டில் சிறப்பு தாசில்தாராக இருந்தவர், இதற்கு எதிராக வருவாய் நிர்வாக ஆணையருக்கு மனு செய்து, விசாரணைக்கு கோரினார். விசாரணையில், அந்த இடம் அரசு புறம்போக்கு எனக் கூறப்பட்டதால், சிக்கல் ஏற்பட்டது. இந்த விவகாரம், சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கில், நீதிபதி எம்.தண்டபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கூறியதாவது:
கடந்த 1905ல், ஈரோட்டின் பிரதான பகுதியில் உள்ள, 12.66 ஏக்கர் நிலத்தை பாப்ளே என்பவர், அப்போதைய பிரிட்டிஷ் அரசிடம் இருந்து லண்டன் மிஷனரிக்காக, 12 ஆயிரத்து 910 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். அதற்கான சான்றும் பெறப்பட்டது. பின், அந்த இடம் சி.எஸ்.ஐ., அறக்கட்டளை நிர்வாகம் வாங்கி அனுபவித்து வருகிறது. அந்த இடத்தில் அப்போதைய சப் - கலெக்டர் பங்களாவும், சுற்றிலும் மைதானம் இருந்தது. இதற்காக, பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரத்தையும், சி.எஸ்.ஐ., நிர்வாகம் வைத்துள்ளது. இதை வைத்து, மொத்த இடத்தையும் சி.எஸ்.ஐ., நிர்வாகம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
கடந்த 2010 ஜூன் 30ல், ஈரோடு செட்டில்மென்ட் அலுவலர் பெயர் மாற்றம் மற்றும் பட்டா கொடுத்து விட்டார். சிறிது நாளில், பதவியில் இருந்து ஓய்வும் பெற்று விட்டார். செட்டில்மென்ட் அலுவலர் உத்தரவுக்கு எதிராக, ஈரோட்டின் அப்போதைய சிறப்பு தாசில்தார், வருவாய் நிர்வாக ஆணையரிடம் முறையிட்டார். ஈரோட்டின் பிரப் சாலையின் ஒரு முனையில் இருந்து, ரயில்வே நிலையம் வரை நீண்டிருக்கும் இடம் குறித்த விசாரணைக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, எல்லா தரப்பையும் அழைத்துப் பேசிய ஈரோடு சிறப்பு தாசில்தார், 'தற்போதைய வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில், 800 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடம் அரசுக்கு சொந்தமானது. 'அதனால், அரசிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று, 30 பக்க விசாரணை அறிக்கையை, வருவாய் நிர்வாக ஆணையருக்கு அளித்தார். இதற்கிடையே, அந்த இடத்தின் ஒரு பகுதியில் இருந்து, ரயில் நிலையம் வரை, 80 அடி சாலை அமைக்கலாம் என, ஈரோடு மாநகராட்சியின், 'மாஸ்டர் பிளான் -- 2' வில் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, சி.எஸ்.ஐ., அறக்கட்டளை நிர்வாகத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். குறிப்பிட்ட, 12.66 ஏக்கர் நிலத்திற்கு வெளிப்பகுதியில் இருக்கும் பிரபலமான மாரியம்மன் கோவில் பக்தர்கள் குழுவும், ஈரோடு மக்கள் நலன் நாடுவோர் சங்கமும், வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டன. இந்த வழக்கு, 2015ல் விசாரணைக்கு வந்தது. சி.எஸ்.ஐ., அறக்கட்டளை நிர்வாகம் தரப்பில், ஏற்கனவே தங்களிடம் இருக்கும் இடத்துக்கான விற்பனை சான்றை தாக்கல் செய்தனர்.
அதில், '12.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், சமூக பணிகளுக்காக சி.எஸ்.ஐ., அறக்கட்டளை நிர்வாகம் கட்டியுள்ள கட்டடம் தவிர்த்த மற்ற இடங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 ரூபாய் வீதம், வாடகை தொகையாக அரசுக்கு செலுத்த வேண்டும்' என, கூறப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், சி.எஸ்.ஐ., அறக்கட்டளை நிர்வாகமும், அரசுக்கு வாடகை செலுத்தி உள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு மேல் வாடகையை பெற, அரசு மறுத்து விட்டது. எனவே, சி.எஸ்.ஐ., அறக்கட்டளை நிர்வாகத்துக்குச் சொந்தமாக எழுப்பப்பட்டிருக்கும் கட்டடங்கள் தவிர, மற்ற இடம் அனைத்தும், அரசுக்கே சொந்தமானது என, பக்தர்கள் மற்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆவணங்களை பரிசீலித்த நீதிபதி எம்.தண்டபாணி, 'அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்பதால், அந்த இடத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட உள்ள, 80 அடி சாலைக்காக, ஈரோடு மாநகராட்சி உடனடியாக நிலத்தை எடுத்து கொள்ளலாம். 'மேலும், சாலை பணிகளுக்கு, தலைமை செயலர், வருவாய்த் துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் உதவியாக இருக்க வேண்டும். கட்டடங்கள் தவிர்த்த மீதமுள்ள இடம் அனைத்தையும் மீட்டு, அரசிடம் சேர்க்க வேண்டும்' என உத்தரவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
உடனடியாக அரசு விஷயத்தில் தலையிட்டு கோர்ட் உத்தரவுப்படி பூர்வாங்க பணிகளில் தொடங்க வேண்டும் என ஈரோடு பொதுமக்களும், பக்தர்களும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.