உசுப்பேற்றிவிட்ட கொங்கு புள்ளிகள்.. கம்முனு இருந்த செங்கோட்டையன் கம்பெடுத்து சுத்தக் காரணம் இதானா..
November 24, 2022
0
எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் ஏற்றம் பெற்ற பிறகு, அமைதியாக இருந்து வந்த செங்கோட்டையன், மீண்டும் அதிரடி காட்டத் தொடங்கியதற்குப் பின்னணியில் இருப்பது ஈரோடு மாவட்ட நிர்வாகிகளின் குமுறல் தானாம்.
அதிமுகவில் கொங்கு மண்டலத்தில் கோலோச்சி வந்த செங்கோட்டையன், 2012க்குப் பிறகு ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார். ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட பலரும், அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு உயர்வுகளை அடைந்தபோதும், செங்கோட்டையன் பின்தங்கியே இருந்தார்.
இந்நிலையில் தான், எடப்பாடி அணியில் பலரும் முக்கிய பதவிகளைப் பெறுவதைச் சுட்டிக்காட்டி செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அவரை உசுப்பேற்றியுள்ளனர் என்கிறார்கள். அதைத் தொடர்ந்தே எல்லோரையும் ஓவர் டேக் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் செங்கோட்டையன்.
காலாவதி மருந்துகளை வாங்கி குவித்து விட்டு நீங்க பேசலாமா எடப்பாடி? வறுத்தெடுக்கும் செல்வப்பெருந்தகை!
அதிமுகவில் முன்னணி தலைவராக இருந்த செங்கோட்டையன், ஜெயலலிதா ஆட்சியில் முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர். 2012ஆம் ஆண்டு முதல் செங்கோட்டையன் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார். செங்கோட்டையனின் மனைவி, மகன் ஆகியோர் ஜெயலலிதாவைச் சந்தித்து, செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புகார் கூறினர். இதையடுத்து, செங்கோட்டையனை அழைத்து கடுமையாக எச்சரித்த ஜெயலலிதா, சில நாட்களில் அவரது அமைச்சர் பொறுப்பில் இருந்தும் தூக்கி அடித்தார். அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்தும் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த செங்கோட்டையனையே தூக்கி எறிந்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இருந்த இடம் தெரியாமலேயே இருந்து வந்தார் செங்கோட்டையன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சீனியர் என்ற முறையில் செங்கோட்டையன் தான் சசிகலாவின் சாய்ஸாக இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், பெரும்பான்மை நிர்வாகிகளின் ஆதரவுடன் முதலமைச்சரானார் எடப்பாடி பழனிசாமி. அதற்குப் பிறகு பத்தோடு பதினொன்றாக அமைச்சரவையில் இடம் பிடித்தாலும் செங்கோட்டையன் பெரிதாக எதிலும் தலைகாட்டுவதில்லை.
எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கொங்கு மண்டலத்தில் இருந்து எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கேசி கருப்பணன் என பலரின் கை ஓங்கத் தொடங்கியதும், செங்கோட்டையனின் செல்வாக்கு பெருமளவில் குறைந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனுக்கு எதிலும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கடந்த ஜூலை மாதம் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை அள்ளிக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
அப்போதும் கூட, சீனியரான செங்கோட்டையனுக்கு முக்கிய பதவிகளை வழங்காமல் தவிர்த்தார். கட்சியில் சீனியராக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு கொடுத்து பின்னால் நிற்கிறார் செங்கோட்டையன், எடப்பாடிக்காக ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தைகளுக்கும் சென்றார், அவருக்கு பதவி கொடுக்காமல் புறக்கணித்துவிட்டார் என செங்கோட்டையன் ஆதரவாளர்கள் குமுறினர். ஈபிஎஸ் தங்களை ஓரங்கட்டுவதாக குற்றம்சாட்டினர். கடந்த சில மாதங்களாகவே பட்டும் படாமல் இருந்து வந்த செங்கோட்டையன் இப்போது பிரகாசமாக முன்னணிக்கு வரத் தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்துத் தொண்டர்களிடம் பேசினார். அப்போது, நமது மண் திராவிட மண், ஒடுக்கப்பட்ட மக்களை தட்டி எழுப்பியவர் தந்தை பெரியார். பெரியாருக்கு பிறகு அண்ணா தனது எழுத்து ஆற்றலால் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பி ஒடுக்கப்பட்டவர்களும் கோட்டைக்கு வரலாம் எனக் காட்டினார். அவர்கள் வழியில் வந்த எம்ஜிஆர் மாபெரும் புரட்சியை உருவாக்கினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று அதற்கடுத்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரை முதல்வராக அமர வைக்கும் வரை தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் எனப் பேசினார்.
மேலும், அதிமுக கூட்டத்தைக் கூட்டினால் எந்தக் கட்சியும் நம்முடன் போட்டியிட முடியாது. தமிழகத்தில் தனித்து நிற்கிறோம் என எந்தக் கட்சியையாவது சொல்லச் சொல்லுங்கள். அதிமுகவால் தனித்து நிற்க முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை. சில வெட்டுக்கிளிகளும், வேடந்தாங்கல் பறவைகளும், சில பட்டுப்பூச்சிகளும், பருவகாலச் சிட்டுகளும் அதிமுகவை விட்டுச் சென்றாலும் யாராலும் வீழ்த்த முடியாது, காற்றை சுவர் எழுப்பித் தடுக்க முடியாது, கடலை அணை போட்டுத் தடுக்க முடியாது" என மூச்சுவிடாமல் பேசினார் செங்கோட்டையன். அவரது பேச்சால் கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாகினர்.
நல்ல பேச்சாற்றல் கொண்ட செங்கோட்டையன், பல ஆண்டுகளாகவே பெரிதாக ஆர்வமின்றிச் செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம் எனக் கேட்டால் கொங்கு மண்டலத்தில் இருந்து பதில் வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்தி பலர் முக்கிய பதவிகளை பெற்றுவிட்டார்கள், உங்களுக்குப் பின்னால் உங்கள் கையைப் பிடித்து அரசியலுக்கு வந்தவர்கள் எந்தந்த உயரங்களுக்கோ சென்றுவிட்டார்கள் என செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் உசுப்பேற்றியுள்ளனராம்.
எல்லோரும் முக்கிய பதவிகளை வாங்கிவிட்டார்கள், நீங்கள் இப்படியே இருந்தால் உங்களை மதிக்கவும் மாட்டார்கள். லோக்கலிலேயே நம் செல்வாக்கு சரிந்துவிடும் என தூபம் போட்டுள்ளனராம். இதையடுத்தே, உறுதியோடு, எடப்பாடி பழனிசாமிக்கு தம் மீது நம்பிக்கை ஏற்படுத்தி, தனது இடத்தை வலுவாக நிலைநாட்டிக் கொள்ளும் திட்டத்தோடு செங்கோட்டையன் களமிறங்கி விட்டார் என்கிறார்கள். தொடர்ந்து, செங்கோட்டையனின் அதிர்வேட்டுகளால்
ஈரோடு மாவட்ட அதிமுகவினர்
கொங்கு மண்டலம் தீப்பறக்கும் என்கிறார்கள்
Tags